''எழுத்தாளனுக்குக் குடிக்கக் காசு இல்லை என்பது எல்லாம் இந்தச் சமூகத்தின் பிரச்னை கிடையாது. கலைஞனைக் கொண்டாடாத சமூகம் உருப்படாது என்று சொன்னால், உழவனையோ... தொழிலாளியையோ கொண்டாடாத சமூகம் மட்டும் உருப்பட்டுவிடுமா?'' - சகல திசைகளிலும் பாகுபாடு இன்றி விமர்சன வெம் மையையும் வெளிச்சத்தையும் பாய்ச்சுகிறார் ஆதவன் தீட்சண்யா. தமிழின் முக்கியமான முற்போக்கு எழுத்தாளர். சமூகப் பிரச்னைகள், இலக்கியப் பிரச்னைகள் என மனம் திறந்து பேசியதில் இருந்து...
''இன்றைய படைப்பாளிகளின் சமூகப் பொறுப்பு எப்படி இருக்கிறது?''
''முதலில் படைப்பாளிகளுக்குப் பொறுப்பு இருக்கான்னே தெரியலை. பெரும்பாலான எழுத்தா ளர்கள் தங்கள் சொந்தப் பிரச்னைகளையே சர்வதேசக் கவனத்துக்குக் கொண்டுவரும் முயற்சிகளில்தான் முனைப்பா இருக்காங்க. ஓர் எழுத்தாளர் 'தன் செல் போனை ரீ-சார்ஜ் பண்ணக் காசு இல்லை'ன்னு எழுது றார். அதுவா இப்போ நாட்டுல பிரச்னை? இன்னிக்கு உலகமயமாக்கல் எல்லோருடைய வாழ்க்கையையும் சிதைச்சிருச்சு. தனியார் நிறுவனங்களில் வாரத்துக்கு நான்கு நாட்கள்தான் வேலை. இன்னும் கணிசமான ஆட்கள் வேலையை விட்டுத் தூக்கப்படும் அபாயம். ஆனால், எழுத்தாளர்கள் எதற்குப் போராடுகிறார்கள்? ஒரு கவிஞன் குடிச்சுட்டுத் தகராறு செஞ்சு போலீஸ் அடிச்சா 'மனித உரிமை மீறல்'னு அலர்றாங்க. 'எழுத்தாளனைச் சமூகம் கொண்டாடலை'ன்னு கூக் குரலிடுகிறார்கள். எதற்காக எழுத்தாளனைச் சமூகம் கொண்டாட வேண்டும்? சமுதாயத்துக்கு நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்? தினமும் எழுத்தாளனுக்கு குவார்ட்டரும் கோழி பிரியாணியும் வாங்கித் தர வேண்டும் என்பது சமூகத்தின் கடமையா, என்ன?''
''ஈழப் பிரச்னையை எப்படிப் பார்க்கிறீர்கள்?''
''யாரிடம் போரை நிறுத்தச் சொல்வதென்றே தெரி யலை. இந்திய அரசை நிர்ப்பந்தித்துப் போரை நிறுத்த வேண்டிய இடத்தில் இருந்துகொண்டே கருணாநிதியும் ராமதாஸூம் நம்மகூட சேர்ந்து கோஷம் போட்ட கொடுமையை என்ன சொல்றது? இன்னொரு பக்கம் பார்த்தா, ஜெயலலிதா கம்யூனிஸ்டுகள் பேசுற 'சுய நிர்ணய உரிமை'ன்னு எதுவும் புரியாமல் எல்லாவற் றைப் பற்றியும் பேசுவதுதான் தமிழ்நாட்டின் சாபக் கேடு. இன்னொரு பக்கம் விஜயகாந்த் ஏதோ மானாட, மயிலாட நிகழ்ச்சி மாதிரி ஒபாமாவுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பச் சொல்றாரு.
ஈழத் தமிழன் பற்றி குரல் கொடுப்பவர்களில் எத் தனை பேர் இங்குள்ள தலித்துகள் பற்றிக் கவலைப் படுகிறார்கள்? கடந்த ஆண்டில் நாடு முழுக்க 22,327 துப்புரவுத் தொழிலாளர்கள் பாதாளச் சாக்கடையில் விஷவாயு தாக்கி இறந்திருக்காங்க. போர்ச் சூழலில் கூட இவ்வளவு இறப்புகள் நடப்பது இல்லை. ஒவ்வொரு 18 நிமிடங்களிலும் ஒரு தலித் வன்கொடு மைக்கு உள்ளாக்கப்படுகிறான். இதைப் பற்றியெல்லாம் இந்தச் சமூகம் என்ன கவலைப்பட்டது? எந்தப் படைப்பாளி கோபப்பட்டு தெருவில் வந்து போராடி னான்? சாதித் தமிழனும் மீதித் தமிழனும் இருக்கும்வரை என்னால் ஒட்டுமொத்தமாகத் 'தமிழன்' என்கிற அடையாளத்தில் நின்று பேச முடியாது!''
''இலக்கியவாதிகள் அரசியல் இயக்கங்களுக்குள் நுழைவதை எப்படிப் பார்க்கிறீங்க?''
''ஒரு காலத்தில் இடதுசாரிகள் எழுதுவது எதுவுமே இலக்கியம் இல்லை, பிரசாரம்னு சொன்னாங்க. சுத்தமான நெய்யினால் தயாரிக்கப்பட்ட மைசூர்பாகு மாதிரி 'சுத்தமான இலக்கியம்', 'உன்னதமான இலக் கியம்'னு பேசின ஆட்கள் எல்லாம் இன்றைக்குத் தி.மு.க-வுக்குப் போகிற இலக்கியவாதிகளைப் பற்றி பேசுவதே இல்லை. கனிமொழி படைப்பாளிங்கிற நிலையிலிருந்து கருணாநிதியின் மகள் என்ற நிலைக்கு முன்னுரிமை கொடுக்கத் துவங்கியதும் தி.மு.க-வுக்குப் 'பிள்ளை பிடிக்கிற வேலை' யில் இறங்க ஆரம்பிச்சார். அறம், உன்னதம், தார்மீகம் எல்லாம் பேசும் படைப்பாளிகள், அழகிரி செய்யும் அட்டகாசங்களைக் கேள்வி கேட்க முடியுமா? கருணாநிதி பேத்தியின் திருமணத்தில் ரவிக்குமார், 'பெண்களை அர்ச்சகராக்க வேண்டும்'னு கோரிக்கை விடுக்கிறார். கருணாநிதியோ, 'வீட்டில் பெண்களின் அர்ச்சனைகள் தாங்க முடியாமல்தான் கோயிலுக்குப் பெண்களை அர்ச்சகர்களாக அனுப்ப நினைக்கிறார்'னு கேலி பேசி அதைக் கடந்து போகிறார். தீவிர பாலியல் கவிதைகள் எழுதிய சில தி.மு.க. பெண் கவிஞர்களிடமிருந்து இதற்கு என்ன எதிர்ப்பு வந்தது?''
''மீண்டும் ராமர் கோயில் பிரச்னையைப் பி.ஜே.பி. கையில் எடுத்திருக்கிறதே?
''ஒரு விஷயத்தைப் புரிஞ்சுக்கங்க. ராமர் கோயில் பத்திப் பேசறவன் என்னிக்குமே ராமருக்குக் கோயில் கட்டப்போறதில்லை. ஓட்டு வாங்குறதுக்குச் சில பேர் காசு கொடுப்பான், சில பேர் சாராயம் வாங்கித் தரு வான். அந்த மாதிரி பி.ஜே.பி-க்கு ராமர் கோயில்! அத னாலதான் ராமருக்கும் அரை டவுசர் மாட்டிவிட்டு ஆர்.எஸ்.எஸ்-ஸில் சேர்த்துட்டாங்க. தமிழ்நாட்டில் எல்லா அரசு அலுவலகங்களும் பூஜை ரூம் மாதிரிதான் இருக்கு. சமயச் சார்பற்ற அரசியலமைப்பு உள்ள ஒரு நாட்டில் அரசு அலுவலகங்களில் கடவுள் படங்களை மாட்டுவது தடை செய்யப்படணும். பொதுவாகவே, சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு திட்டமிட்டு விதைக்கப்படுது. சினிமா தொடங்கி சீரியல் வரை சிறுபான்மையினருக்கு எதிரான கருத்து உருவாக்கப்படுது. இது ஆபத்தானது!''
''உலகளவில் இன்று ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியை எப்படிப் பார்க்கிறீர்கள்?''
''உண்மையில் தேசிய மயமாக்கம்தான் இன்று இந்தியாவைக் காப்பாற்றிக்கொண்டு இருக்கிறது. பஸ்ஸில் கண்டக்டர் ஐம்பது பைசா சில்லறை தராவிட்டால், 'எல்லாத்தை யும் பிரைவேட் ஆக்கிடணும்'னு பேசின புண்ணியவான்கள் கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. ஆனாலும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் தனியாருக் குச் சலுகைகளை வாரிக்கொட்டுவதை அரசு இன்னமும் நிறுத்தவில்லை. குஜராத் தில் முழு மதுவிலக்கு அமலில் உள்ளதாக பீற்றிக்கொள்வார்கள். ஆனால், அங்குள்ள சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் பார் உண்டு! இந்தியாவுக்குள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்குக் கட்டுப் படாத பகுதின்னா, அது சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்தான். சாஃப்ட்வேர் கம்பெனிகளில் வேலை பார்ப்பவர்கள் ஆறு மாதத்துக்கு முன்பு வரை வெளிநாட்டுக்காரன் மாதிரி,வேற்றுக் கிரகவாசி மாதிரிதான் நடந்துட்டு இருந்தாங்க. ஆனால், இன்றைக்குப் 'பத்தாயிரம் ரூபாய் சம்பளம் போதும்'னு டி.என்.பி.எஸ்.சி. புத்தகம் படிக்க ஆரம்பிச்சிட்டான். ஞாபகத்துல வெச்சுக்கங்க, டி.என்.பி.எஸ்.சி. புத்தகம் மட்டுமில்லை... உலகளவில் இப்போ அதிகமா விற்பனையாவது காரல் மார்க்ஸின் 'மூலதனம்' புத்தகம்தான். இன்றைய நெருக்கடிக்கு இயல்பான, மாற்று மார்க்சியம்தான்!''
''இன்றைய சூழல் பெண்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று கருதுகிறீர்களா?''
''பெண்களுக்குத் தங்களைப் பற்றிய பார்வைகள் நிறைய மாறியிருக்கின்றன. ஆனால், பெண்களைப் பற்றிய ஆண்களின் பார்வை மட்டும் இன்னும் மாறவே இல்லை. மங்களூரில் பெண்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதலையே எடுத்துக்கொள்வோம்... பெண்கள் குடிப்பது மட்டும்தான் முன்னேற்றம் என்று நானும் கருதவில்லை. ஆனால், குடிப்பதே தவறு என்று கருதுபவன் முதலில் ஒயின் ஷாப்களை அடிச்சு நொறுக்கிட்டுதானே பப் பெண்கள் மீது தாக்குதல் நடத்த வரணும்?
கொடைக்கானலில் ஒரு ஊராட்சியில் பெண் கவுன்சிலர்களின் கணவர்களே ஒன்று சேர்ந்து ஊராட்சிமன்றக் கூட்டத்தை நடத்தி இருக்கிறார்கள். இப்படி இருக்கும்போது, எப்படிப் பெண்களின் வாழ்க்கையில் மாற்றம் வந்ததாகச் சொல்ல முடியும்?
இன்னமும் பெண்கள் தங்களின் ஏ.டி.எம். கார்டு பின்நம்பரைக்கூட கணவனுக்குத் தெரிந்துதான் வைத்திருக்க முடியும் என்பதுதானே யதார்த்தம்?''
****************************
ரீ.சிவக்குமார், படம்: பா.கந்தகுமார்
நன்றி - ஆனந்த விகடன்.
***********************************
குறிப்பு: அண்ணன் சாருவின் எதிர்வினை :)
http://charuonline.com/April09/vikatan.html
Friday, April 10, 2009
Subscribe to:
Posts (Atom)



